11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 8 வார பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள இதுவரை 500 பள்ளிகளைச் சேர்ந்த 11,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் பதிவு செய்துள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நெறி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘ஐஐடிஎம் பள்ளி இணைப்புத் திட்ட’த்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ‘தரவு அறிவியல்- செயற்கைத் தொழில்நுட்பம்’, ‘எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்’ ஆகிய இரு சான்றிதழ் படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன.
பள்ளி மாணவர்களுக்கென வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கங்களுடன், சென்னை ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு இதற்கான பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கற்பிக்கப்படும் இப்படிப்புகளின் மூலம் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நெறி அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.
இந்தத் துறைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்கும் வகையில் மாணவர்களுக்கான அறிமுகப் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் உயர்கல்வி, தொழில்நெறி ஆகியவை குறித்த விவரங்களை முழுமையாக அறிந்து முடிவெடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.
அடுத்த தொகுதி 21 அக்டோபர் 2024 அன்று தொடங்குவதையொட்டி, அதற்கான விண்ணப்பப் பதிவுகள் செப்டம்பர் 16-ந் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்பட விரும்பும் பள்ளிகள் பின்வரும் இணைப்பில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்… https://school-connect.study.iitm.ac.in/
இப்படிப்பிற்கான காலஅளவு 8 வாரங்களாகும். இந்த முன்முயற்சிக்குப் பள்ளிகள் தரப்பில் இருந்து கணிசமான அளவு வரவேற்புக் கிடைத்துள்ளது. இதுவரை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் சென்னை ஐஐடி உடன் இணைந்து செயல்பட முன்வந்திருக்கின்றன. முதல் தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து ஏறத்தாழ 11,000 மாணவ-மாணவிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களை இணைத்துக் கொண்டுள்ள பள்ளிகளைச் சேர்ந்த 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இந்த சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment