Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 19, 2024

குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு ரூ.50,000. மத்திய அரசு தொடங்கிய திட்டம்.!


அடுத்த தலைமுறையினருக்கு நிதி சுதந்திரம் அளிக்கும் விதமாக, சேமிப்பு வாயிலான புதுமையான ஓய்வூதியத் திட்டம், இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 35 சிறுவர்களின் பெயரில் கணக்குத் தொடங்கப்பட்டு, அதற்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, ஒரு குழந்தை பிறக்கும் போதே அந்த குழந்தையின் பெயரில் ஆண்டுக்கு ரூ.50,000 செலுத்தினால் அந்த குழந்தைக்கு 18 வயதாகும் போது ரூ.25 லட்சம் கிடைக்கும். அதே வேளையில் அந்த குழந்தை தனது பருவ வயதை எட்டி, தாமாக வருவாய் ஈட்ட தொடங்கும் போது, தாமே இந்தத் தொகையை செலுத்தினால், அவருடைய ஓய்வு வயதின்போது (60 வயது) ரூ.12.5 கோடி வரை கிடைக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமூக பாதுகாப்பை வழங்க மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக கூறினார். அந்த வகையில் ஏற்கனவே அரசு ஊழியர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டம், தனியார் துறையினர் மற்றும் பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அந்த வகையில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஓய்வூதிய பலன்கள் அளிக்கும் என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் அவர்களது பொருளாதார சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் என்றார். குறைந்தது ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தி திட்டத்தில் சேரலாம் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டத்தின்படி சேமிப்புத் தொகைக்கு உச்சவரம்பு ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டம், பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் பொருந்தும். அவர்களுக்கான சந்தா தொகையை பெற்றோர் அல்லது பாதுகாவலர் செலுத்தலாம். இந்தத் திட்டக் கணக்குகளை வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதியங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வாயிலாகவும், e-NPS என்ற இணையதளம் வாயிலாகவும் தொடங்கலாம். பாதுகாவலரின் ஆதார், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேடு போன்றவற்றை இருப்பிடத்திற்கான ஆதாரமாக காட்டலாம். பாதுகாவலரின் வருமானவரி நிரந்தர கணக்கு எண் அல்லது படிவம் 60-ன் படி உறுதிமொழி அளித்தும் கணக்கு தொடங்கலாம். கணக்குத் தொடங்கப்படும் குழந்தையின் வயது சான்றாக, பிறப்பு சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ் போன்றவற்றையும் அடையாளமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர் வெளிநாடுவாழ் இந்தியராக இருந்தால் அதற்கான வங்கி ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

குழந்தையின் கல்வி, குறிப்பிட்ட வகை உடல்நலக் குறைபாடு, உடல் ஊனத்திற்கான சிகிச்சை போன்ற தேவைகளுக்காக, முதலீடு தொடங்கியதிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மொத்த பங்களிப்பில் 25 சதவீதத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இது போன்று 3 முறை திரும்பப் பெற அனுமதிக்கப்படும். 18 வயது நிரம்பும்போது, இத்திட்டத்திலிருந்து வெளியேறிக் கொள்ளவோ அல்லது தொடர்ந்து தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கோ அனுமதி அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News