Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இதையொட்டி விடைத்தாள்கள் ஸ்கேன் செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கோரியுள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுக்கு 2 தடவை டெட் தேர்வுநடத்தப்பட வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் அதுபோன்று டெட் தேர்வை நடத்துவதுகிடையாது. 2022-ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய டெட் தேர்வு கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டது. 2024-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் 2024-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால், 5 மாதங்கள் ஆகியும் தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
எனவே, ஆசிரியர் தேர்வுவாரியம் டெட் தேர்வுக்கான அறிவிப்பை வெகுவிரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இணையவழி தேர்வாக நடத்தப்பட்டு வந்த டெட் தேர்வுஇந்த முறை ஓஎம்ஆர் ஷீட் வடிவிலான தேர்வாகவே இருக்கும். இதற்காகவே ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக டிஆர்பி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாதம் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் நவம்பர் மாதம் தேர்வு நடத்த அதிக வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment