Monday, September 30, 2024

பள்ளிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காலத்தில் மாணவர் பாதுகாப்புக்காக பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: வடகிழக்கு பருவமழைஅக்.3-வது வாரம் தொடங்க உள்ளது. இதையடுத்து மாநிலம்முழுவதும் உள்ள பள்ளிகளில்மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள், மழைக் காலத்தில் மாணவர்கள் செய்ய வேண்டியவை உட்பட வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடுதல், குழிகளை நிரப்புதல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த கட்டிடங்களை பயன்படுத்துவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அத்தகைய கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதவிர பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏரி, ஆறு, குளங்களில் மாணவர்கள் சென்று குளிப்பதை தவிர்க்கவும், வெள்ளம் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக் கூடாது என்பதையும் பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள் சைக்கிள்களில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும். தொடர் மழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும். மேலும், பழுதான சுற்றுச்சுவர் பகுதிகளை சுற்றி வேலி அல்லது தடுப்பு ஏற்படுத்திட வேண்டும்.

அதேபோல், மின் இணைப்புகள் சரியாக உள்ளதா, மின்கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்து உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவை மூடப்பட வேண்டும். பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் நோய்களில் (டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட) இருந்து பாதுகாத்து கொள்வதற்கான உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News