Wednesday, October 9, 2024

வானவில் மன்ற அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வானவில் மன்ற அறிவியல் மாநாட்டுக்கான ஆய்வு கட்டுரைகளை சமர்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: “கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக ‘வானவில் மன்றம்-நடமாடும் அறிவியல் ஆய்வகம்’ 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 13,236 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக 2024-25-ம் கல்வியாண்டுக்கான வானவில் மன்ற தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வானவில் மன்றங்களின் அடுத்தகட்ட முன்னேற்ற நிலையாக இந்த அறிவியல் மாநாடு கருதப்படுகிறது.

இந்த மாநாட்டில் வகுப்பறைகளில் அனைத்து மாணவர்களும் அறிவியலை செய்து பார்த்து கற்று பகிர்ந்து கொள்வதற்காகவும், தினமும் புதுமையானதை பரிணமிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தவும் அறிவியல், கணித ஆசிரியர்களின் அனுபவங்கள் ஆய்வுக் கட்டுரைகளாக தொகுக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளன. இதற்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் நவம்பர் 1-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை டிசம்பர் 10ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும். அதில் சிறப்பாக இருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் மண்டல, மாநில அளவு மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும். இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு பரிசுகளும் தெரிவிக்கப்படும். மேலும், அதிகளவில் ஆசிரியர்களை பங்கேற்க செய்யும் முதல் 3 மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News