Join THAMIZHKADAL WhatsApp Groups
மாணவர்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான அறிவுரைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த அறிவுரைகளை பின்பற்றுதல் அவசியம், அவற்றை உரிய அதிகாரிகள் பார்வையிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
மாணாக்கர்களின் பாதுகாப்பு பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது. வடிகால்களை சுத்தம் செய்வது. திறந்தவெளி கால்வாய்களை தூர்வாரி மூடுவது, குழிகளை நிரப்புவது, மாணவர்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்றுதல் வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பள்ளிகளில் தங்க வைக்க பள்ளி மற்றும் உணவுக் கூடங்களில் சாவி வைத்திருக்கும் பொறுப்பாளர் விவரங்கள், தொடர்புடைய வருவாய்த்துறை அலுவலர்களுக்கு அளிக்க வேண்டும். பள்ளி மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதைக் கண்காணித்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.பலவீனமான மற்றும் பழுதடைந்துள்ள கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் வேண்டும்.
பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யாக்கூடாதவை குறித்து மாணாக்கர்களுக்கு தெரிவித்தல் வேண்டும்.விடுமுறை காலங்களில் பள்ளிக் கட்டிடங்களை, குறிப்பாக மேற்கூரையினை தூய்மையாக பராமரிக்க 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் உதவியுடன் தேவையான பணிகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி கட்டிடங்களின் மேற்கூரையில் உரிய தரைத்தளம் சரியாகவும், பாதுகாப்பாகவும் அமைந்துள்ளதை ஆய்வு செய்து, புதிய பராமரித்தலுக்கான நடவடிக்கை எடுத்திட வேண்டும். பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பராமரிப்பு நிதியினை இதற்கென பயன்படுத்தலாம். இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இடிப்பதற்கான நடவடிக்கை எடுத்திடல் வேண்டும். சிறிய கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டிய நிலையில் பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலம் இடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கலாம்.பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் மாணவர்கள் சென்று குளிப்பதை தவிர்க்க பெற்றோருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என பெற்றோருக்கு அறிவுரைகள் வழங்கிட வேண்டும். கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோரும் மேற்கூறிய அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூற வேண்டும். மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு, மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment