Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 575 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இங்கு சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பொறியியல் டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. சிவில், மெக்கானிக்கல் உள்ளிட்ட பொறியியல் சார்ந்த பாடப்பிரிவுகளிலும், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆங்கிலம் ஆகிய பொறியியல் சாராத பாடப்பிரிவுகளிலும் விரிவுரையாளர் பதவியில் 2051 பணியிடங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் 1476 பணியிடங்களில் மட்டுமே விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எஞ்சிய 575 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. இதில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பாடத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கு விரைவில் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதையொட்டி விரிவுரையாளர் பதவியில் பாடவாரியாக காலியிடங்களின் பட்டியலை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பொறியியல் பாட விரிவுரையாளர் பதவிக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதல் வகுப்பு பிஇ அல்லது பிடெக் பட்டமும், பொறியியல் அல்லாத பாட விரிவுரையாளர் பதவிக்கு (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல்) சம்பந்தப்பட்ட பாடத்தில் முதல் வகுப்பு முதுகலை பட்டமும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக விரிவுரையாளர் தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்புோது 1058 விரிவுரையாளர்கள் டிஆர்பி மூலம் தேர்வுசெய்யப்பட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்டனர். தற்போதுள்ள 575 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு டிஆர்பி விரைவில் வெளியிட உள்ள வருடாந்திர தேர்வு அட்டவணையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment