Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 6, 2024

பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி: மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவு


பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு மாதம்தோறும் உதவித்தொகை (Fellowship) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலர் ஜி.லட்சுமிபிரியா இன்று (நவ.5) வெளியிட்டுள்ள அரசாணையின் விவரம்: பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம், பட்ட மேலாய்வாளர் போன்ற இளம் வல்லுநர்களின் திறமைகளை பயன்படுத்தும் வகையில் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டின் மானியக் கோரிக்கையின்போது ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழகத்தில் இளைஞர்களின் சமுதாய பங்கேற்பை கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சியுடன் ஒருங்கிணைக்கும் வகையில் பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சிக்காக புத்தாய்வு திட்டத்தை நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்த ரூ.150 கோடிக்கு ஒப்புதல் அளிக்க அரசாணை வெளியிடுமாறு பழங்குடியினர் நல இயக்குநர் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், அமைச்சரின் அறிவிப்பின்படியும், இயக்குநரின் கருத்துருவை ஏற்றும், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் மற்றும் பட்ட மேலாய்வாளருக்கு உதவும் வகையில் தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் உருவாக்கப்பட்டு இத்திட்டத்தை நடப்பு நிதி ஆண்டில் செயல்படுத்த 1 கோடியே 50 லட்சம் மட்டும் ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.


இத்திட்டத்தின் கீழ், இறுதி ஆண்டு இளங்கலை, முதுகலை மாணவர்கள் 25 பேருக்கு 6 மாத காலத்துக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரமும், அதேபோல் முனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட மேலாய்வாளர்கள் 45 பேருக்கு 3 ஆண்டு காலத்துக்கு மாதம்தோறும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News