Join THAMIZHKADAL WhatsApp Groups
60 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு மாதந்தோறும் 1200 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்து எப்படி மாதந்தோறும் 1200 ரூபாய் உதவித்தொகை பெறுவது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.இந்திராகாந்தி முதியோர் உதவித்தொகை திட்டம் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் மாதந்தோறும் 20 ரூபாய் என 1962ஆம் ஆண்டு முதியோர் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டது. தற்போது மாதம் 1200 ரூபாயை ஆதரவற்ற முதியோர் இந்த திட்டத்தின் மூலம் பெறுகின்றனர்.இதில் 60 வயது முதல் 79 வயது வரையிலான ஆதரவற்ற முதியோருக்கு 80 சதவீத தொகையை மாநில அரசும் 20 சதவீத தொகையை மத்திய அரசும் வழங்குகின்றன.
80 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோருக்கு 60 சதவீத தொகையை மாநில அரசும், 40 சதவீத தொகையை மத்திய அரசும் வழங்குகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 60 வயது மற்றும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம்.அந்தந்த தாலுகா அலுவலங்களில் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. தகுதியுள்ள முதியோர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பம் செய்யலாம் இல்லையெனில் ஆன்லைனில் Tamil Nadu e-Governance agency (TNeGA) என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.ஆதரவற்ற நிலையிலும் , உணவுக்கு வழியில்லாமலும் கைவிடப்பட்டு நிற்கும் முதியோர்களே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். கணவன் இல்லாமல் இருக்கும் பெண்கள் மற்றும் பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்கள் விண்ணப்பம் செய்யலாம்.அதே போல யாருடைய ஆதரவும், பாதுகாப்பும் இல்லாத ஆண்கள் இதில் விண்ணப்பம் செய்யலாம்.
ஒரு வேளை உணவுக்கு கூட வழி இல்லாதவர்கள், நிரந்தர குடியிருப்பு உள்ளவர்கள், உறவினர்கள் மட்டுமின்றி வேறு யாருடைய பாதுகாப்பிலும், ஆதரவிலும் இல்லாதவர்களாகவும் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த திட்டத்தில் வயது முதிர்ந்த ஆதரவு இல்லாத கணவன் மற்றும் மனைவி இருவருமே விண்ணப்பம் செய்யலாம்.ஆதார் அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதற்கான பிபிஎல் எண், குடும்ப அட்டை, கைபேசி எண் ஆகியவற்றோடு ஈ சேவை மையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். சில சமயங்களில் அரசு சார்பாக உதவித்தொகை முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன் வாயிலாகவும் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.விண்ணப்பம் செய்தவுடன் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பமானது கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்படும்.
பின்னர் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளருக்கு இதனை அனுப்புவார். வருவாய் ஆய்வாளர் உரிய விசாரணையை மேற்கொண்டு தன்னுடைய பரிந்துரையை வழங்குவார். இதன் அடிப்படையில் இந்த உதவி தொகையானது வழங்கப்படும்
No comments:
Post a Comment