Join THAMIZHKADAL WhatsApp Groups
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு(யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: கல்வி மைய வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கவேண்டும். அதற்குபதிலாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று ஏற்பாடுகள் மூலம் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
குறிப்பாக உணவகங்கள், விடுதிகள் உட்பட இடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடை செய்யவேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு இயக்கங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்த வேண்டும். அதேபோல், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்பாட்டை தவிர்க்க வளாகங்களில் குடிநீர் தொட்டிகள் போன்ற மாற்று வசதிகளை நிறுவ வேண்டும். மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கவர்களுக்கு பதிலாக துணி, காகித பைகள் போன்ற மாற்று தீர்வுகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் உட்பட பல்வேறு வழிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்கள் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment