Join THAMIZHKADAL WhatsApp Groups
நீரிழிவு நோயில் (Diabetes), இந்தியா உலக நாடுகளின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 2019 மற்றும் 2021 ஆண்டில் எடுக்கப்பட்ட National Family Health Survey-யின் படி 35 வயதுக்கும் குறைவான இளம் பருவத்தினர் அதிகமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறது.
இந்திய மக்கள் தொகையில் 80 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இது 2045-ஆம் ஆண்டில் 135 மில்லியனாக உயரக்கூடும் என்றும் 2030 ஆண்டில் 98 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் என்கிறது சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு மற்றும் நோயின் உலகளாவிய சுமை திட்டம் நடத்திய ஆய்வு. இப்படி எதிர்கால இந்தியாவையே அச்சுறுத்தும் நோயாக வளர்ந்துகொண்டிருக்கும் நீரிழிவு நோய் என்பது என்ன.? இது எப்படி உருவாகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோய் என்றால் என்ன..?
நீரிழிவு நோய் என்பது இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு அல்லது இரத்தத்தின் சர்க்கரை அளவு உயரும்போது ஏற்படக்கூடிய நாள்பட்ட நோயாகும். நாம் தினசரி உண்ணும் உணவிலிருந்து கிடைக்கக்கூடிய குளுக்கோஸ் உடல் இயக்கத்திற்கு ஆற்றலாக செயல்பட உதவுகிறது. இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாற வேண்டுமெனில் கணையத்திலிருந்து உருவாகக்கூடிய இன்சுலின் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது. காரணம், இதுதான் குளுக்கோஸை உடல் செல்களுக்கு ஆற்றலாக கடத்த உதவுகிறது.
சில நேரங்களில் நம் உடல் போதுமான இன்சுலினை உருவாக்காமல் போகலாம் அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை உடலால் சரியாக பயன்படுத்த முடியாமல் போகலாம். இந்நிலையில் குளுக்கோஸானது இன்சுலின் கிடைக்காத காரணத்தால் இரத்தத்திலேயே தேங்கிவிடும். இதனால் செல்களுக்கும் ஆற்றல் கிடைக்காது.
அப்படி இரத்தத்தில் தேங்கும் குளுக்கோஸ் அதிகமாகும்போது பல வகையான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அப்படி உருவாவதுதான் நீரிழிவு நோய். இதை குணப்படுத்த மருந்துகளோ, மருத்துவமோ கிடையாது. மாறாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் அதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
சிலர் நீரிழிவு நோய் நெருங்கும் நிலையில் இருக்கிறார் அல்லது அறிகுறிகள் வருவதுபோல் தென்படுகிறது என்று எச்சரிப்பார்கள். ஆனால் நீரிழிவு நோயை பொறுத்தவரை சர்க்கரை நோய் என்ற பேச்சு வந்துவிட்டாலே ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.
நீரிழிவு நோயின் வகைகள் என்னென்ன..?
பெரும்பாலானோர் 2 வகையான நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவை..
1) டைப் 1 நீரிழிவு நோய்
2) டைப் 2 நீரிழிவு நோய்
டைப் 1 நீரிழிவு நோய் என்றால் என்ன..?
டைப் 1 நீரிழிவு நோய் (type 1 diabetes) என்பது உங்கள் உடல் இன்சுலின் ஹார்மோனை சுரக்கவில்லை என்று அர்த்தம். அதாவது உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் கணையத்தில் இன்சுலின் ஹார்மோன் சுரக்க காரணமாக இருக்கும் செல்களை அழித்துவிட்டால் இந்நிலை ஏற்படும். இந்த டைப் 1 நீரிழிவு நோயானது எந்த வயதிலும் உருவாகும். குறிப்பாக குழந்தைகள், இளம் பருவத்தினரிடையே அதிகமாக காணப்படும். அப்படி டைப் 1 நீரிழிவு நோய் வந்தவர்கள் தினமும் தவறாமல் செயற்கையாக இன்சுலின் மாத்திரை எடுத்துக்கொள்வது அவசியம். அப்படி செய்தால் மட்டுமே டைப் 1 நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.
டைப் 2 நீரிழிவு நோய் என்றால் என்ன..?
டைப் 2 நீரிழிவு நோய் (type 2 diabetes) என்பது கணையம் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்தும் உடலால் அதை பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று அர்த்தம். இந்நிலையில் குளுக்கோஸ் இரத்தத்திலேயே தேங்கி அதிகரித்துவிடும். இது பல்வேறு வகையான நாள்பட்ட நோய்களுக்கும் வழி வகுக்கலாம்.
டைப் 2 நீரிழிவு நோய் எந்த வயதிலும் தாக்கக்கூடும். குழந்தைகள் , பெரியவர்கள் , முதியவர்கள் என்று பாராமல் எந்த வயதினரையும் தாக்கலாம். அவ்வாறு பெரும்பாலும் மத்திய வயது மற்றும் முதியவர்களிடையேதான் டைப் 2 நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுகிறது. இது உலக அளவிலும் மிகவும் பொதுவான நோயாகவும் பார்க்கப்படுகிறது.
கர்ப்பகால நீரிழிவு நோய் என்றால் என்ன..?
கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடியது என்பதால் 'கர்ப்பகால நீரிழிவு' நோய் (Gestational diabetes) என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் குழந்தை பிறந்தவுடன் குணமாகிவிடும். ஒருவேளை கர்ப்பகாலத்தில் இது தீவிரமாக இருந்தால் குழந்தை பிறந்த பின்பு டைப் 2 நீர்ழிவு நோயாக மாறும் அபாயம் உள்ளது. சிலநேரங்களில் கர்ப்பகாலத்தில் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் என்பது டைப் 2 வகையை சேர்ந்ததாகவே இருக்கும்.
இதர நீரிழிவு நோய் வகைகள் என்ன..?
மோனோஜெனிக் நீரிழிவு நோய் (monogenic diabetes) மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் தொடர்பான நீரிழிவு நோய் (cystic fibrosis-related diabetes) ஆகிய இந்த இரண்டு நீரிழிவு நோய் வகைகள் மிக அரிதாக உருவாகக்கூடிய பரம்பரை நீரிழிவு நோய் வகையாகும்.
யாருக்கெல்லாம் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் உள்ளது..?
45 வயது அல்லது அதற்கு மேல் உள்ள முதியவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் உருவாகலாம். பரம்பரையாக நீரிழிவு நோய் இருக்கிறது எனில் மரபணு காரணங்களால் உங்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவை தவிர உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாமை, ஏதேனும் நோய் காரணிகள், இரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படலாம். உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படப்போகும் அறிகுறிகள் இருந்தாலோ அல்லது கர்ப்பிணிகளுக்கும் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகலாம்.
நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு உடளவில் ஏற்படக்கூடிய மற்ற பாதிப்புகள் என்னென்ன..?
உயர் இரத்த சர்க்கரை அளவு இருக்குமானால் பின்வரும் நோய் பாதிப்புகளும் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
-இதய நோய்
-பக்கவாதம்
-சிறுநீரகக் கோளாறு
-கண் பிரச்சனைகள்
-பல் தொடர்பான பிரச்சனைகள்
-நரம்பு பிரச்சனை
-கால் பாதத்தில் பாதிப்பு
நீங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகள், உணவு முறைகளை சரியாக பின்பற்றி வந்தால் மேற்சொன்ன தீவிர பாதிப்புகளை தவிர்க்கலாம்.
No comments:
Post a Comment