Join THAMIZHKADAL WhatsApp Groups
இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) புதிய விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.குறிப்பாக பட்டப்படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி தொடர்பாக வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதில் முக்கியமாக 12-ம் வகுப்பு அல்லது நிலை 4-ல் ஒரு மாணவர் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும், இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் சேர முடியும். அதேநேரம் தான் சேர விரும்பும் துறையில் தேசிய அளவிலான அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் அவர் வெற்றி பெற வேண்டும். இதைப்போல இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையில் படித்த ஒரு மாணவரும், சம்பந்தப்பட்ட நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றால் முதுகலையில் எந்த துறையையும் தேர்ந்தெடுக்க முடியும்.நிறுவனங்களின் கல்வி மற்றும் கட்டமைப்பு வசதிகளை பொறுத்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை இளங்கலை 2-ம், 3-ம், 4-ம் ஆண்டுகளில் நேரடி சேர்க்கை நடத்தலாம்.
இதைப்போல முதுகலை பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டில் நேரடியாக அனுமதிக்க முடியும்.மேலும் பாடத்திட்டம் மற்றும் கடன் கட்டமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவு, நிறுவனம் மற்றும் கற்றல் முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகளைத் தொடரலாம் என்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய விதிமுறைகளில் கூறப்பட்டு உள்ளன.இந்த புதிய விதிமுறைகள் அதிக நெகிழ்வுத்தன்மையை அறிமுகப்படுத்துவதுடன், ஒழுங்குமுறை கடினத்தன்மையை நீக்கி, மாணவர்களுக்கான உள்ளடக்கம் மற்றும் பலதரப்பட்ட கற்றல் வாய்ப்புகளை வழங்கும் என பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-யு.ஜி.சி. புதிய விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் கடந்தகால பாடப்பிரிவு தகுதியைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு துறையிலும் படிக்கலாம். இந்தச் சீர்திருத்தங்கள் மூலம், இந்திய உயர்கல்வி உலகளாவிய தரத்தை எட்டுவதை உறுதி செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment