Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மதுரை ஆசிரியைக்கு மருத்துவ செலவு தொகையை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வரும் தனலெட்சுமி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு ரூ.1,22,254 செலவானது. இந்த தொகையை அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் திரும்பக் கோரி மனு அளித்தார். அரசு ஊழியர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதால் சிகிச்சைக்கான செலவு தொகையை திரும்ப வழங்க மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தனலெட்சுமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு மருத்துவ செலவு தொகை வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மனுதாரருக்கு 12 வாரத்தில் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு 25.3.2019-ல் உத்தரவிட்டார். அதன்பிறகும் பணம் வழங்கப்படாத நிலையில் மனுதாரர் மீண்டும் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மாவட்ட அளவிலான குழு பரிந்துரையின் பேரில் 4 வாரத்தில் பணம் வழங்க வேண்டும் என 28.11.2019ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுகளை ரத்து செய்யக் கோரி மாநில நிதித்துறை செயலாளர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: ''அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு விஷயத்தில் மாவட்ட அளவிலான குழுவின் முடிவு இறுதியாது. இந்தக் குழுவில் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்ளனர். மருத்துவ செலவு தொகை வழங்குவதில் காப்பீட்டு நிறுவனத்துக்கு ஆட்சேபம் இருந்தால் குழுவிடம் தன் தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட அளவிலான குழு மருத்துவ சிகிச்சைக்கான தொகையை வழங்க உத்தரவிட்டால் அந்தப் பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுக்க முடியாது. அவ்வாறு மறுக்கும் அதிகாரம் காப்பீட்டு நிறுவனத்துக்கு கிடையாது. மாவட்ட குழுவில் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி இருப்பதால் மாவட்ட குழுவின் முடிவுக்கு மாறாக வேற முடிவெடுக்க முடியாது.
இந்த வழக்கில் மாவட்ட குழுவின் பரிந்துரையில் பிரச்சினை இருந்தால் காப்பீட்டு நிறுவனம் மாநில அளவிலான குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். அவ்வாறு எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. எனவே மாவட்ட குழு 25.9.2019-ல் எடுத்த இறுதியானது. அதன்படி ஆசிரியை தனலெட்சுமிக்கு 8 வாரத்தில் மருத்துவ செலவு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும். தவறினால் 7 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்.'' இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment