Join THAMIZHKADAL WhatsApp Groups

பொதுத்தேர்வு: 100 சதவீத தேர்ச்சி இலக்கு; தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் - Public exams: 100 percent pass rate target; Instructions to head teachers
கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவியர் மீது சிறப்பு கவனம் செலுத்தி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை எட்டச் செய்ய வேண்டும்,' என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், பள்ளி கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம், நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், 163 அரசு பள்ளிகளில், 15,733 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும், 12,034 மாணவ, மாணவியர் பிளஸ் 2 பொதுத்தேர்வும் எழுத உள்ளனர்.
ஆய்வுக்கூட்டத்தில், கடந்தாண்டு தேர்ச்சி விகிதம், நடப்பு கல்வியாண்டுக்கான காலாண்டு, அரையாண்டு மற்றும் முதல் திருப்புதல் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம், கடந்தாண்டு பிளஸ் 1 வகுப்பு தேர்ச்சி விகிதம் தொடர்பாக, தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
தேர்வுக்கு வராத மாணவர்களை, பள்ளி மேலாண்மைக்குழுவின் துணையோடு, மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்து சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். கல்வியில் பின்தங்கிய மாணவர்களை, ஒரு மதிப்பெண் வினாக்கள், முக்கியமான 2, 3 மதிப்பெண் வினாக்களை படிக்கவைக்க வேண்டும்.
பாட பகுதிகளை விளக்கி, குறைந்த பகுதிகளை தினமும் படிக்க வைக்கவேண்டும். சிறு தேர்வுகள் நடத்தவேண்டும்.
தினந்தோறும் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். பெற்றோருடன் கலந்துரையாடி வீட்டிலும் கூடுதல் நேரம் படிக்க அறிவுறுத்தி, நுாறு சதவீத தேர்ச்சி இலக்கை பெற்றுத்தரவேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
No comments:
Post a Comment