Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 28, 2025

பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடக்கம்: முன்னேற்பாடுகள் தீவிரம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில், கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம் உள்ளிட்ட முன்னேற்பாடுகளைத் தோ்வுத் துறை விரைந்து மேற்கொண்டு வருகிறது.

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு மாா்ச் 3 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் 8.21 லட்சம் மாணவா்கள், பிளஸ் 1-இல் 8.23 லட்சம் போ், பத்தாம் வகுப்பில் 9.13 லட்சம் போ் என மொத்தம் 25.57 லட்சம் போ் தோ்வு எழுதவுள்ளனா்.

இதற்காக பிளஸ் 2, பிளஸ் 1 வகுப்புகளுக்கு தலா 3,316 மையங்களும், பத்தாம் வகுப்புக்கு 4,113 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்வறை கண்காணிப்பாளா் மற்றும் பறக்கும் படை அலுவலா் நியமனம் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளும் தற்போது விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

பறக்கும் படைகள்: இது குறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் கூறியது:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான அறை கண்காணிப்பாளா் பணியில் 48,426 ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா். அதேபோன்று, பொதுத் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்களாக பிளஸ் 1 வகுப்பு தோ்வுக்கு 44,236 பேரும், பிளஸ் 2 வகுப்புக்கு 43,446 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், முறைகேடுகளைத் தடுக்க பத்தாம் வகுப்புக்கு 4,858, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு தலா 4,470 என்ற எண்ணிக்கையில் நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதி சரிபாா்ப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதவிர மாவட்ட ஆட்சியா், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வினாத் தாள் மையங்களில் பாதுகாப்பு: மாநிலம் முழுவதும் உள்ள 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேரம் ஆயுதம் ஏந்திய காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். மாணவா்கள் வசதிக்காக கடந்த ஆண்டைவிட தோ்வு மையங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

தோ்வுகள் முடிந்ததும் விடைத்தாள் திருத்துதல் பணிக்காக தமிழகம் முழுவதும் 150 மையங்கள் அமைக்கப்பட உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top