Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதிநாளில் நடைபெற்ற வேதியியல் தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது.
இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இறுதிநாளில் வேதியியல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இதில் வேதியியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘1, 2 மதிப்பெண் வினாக்களை தவிர 3, 5 மதிப்பெண் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டு இருந்தன. வழக்கமாக 2-ம் தொகுதி பாடப் புத்தகத்தில் இருந்து அதிகமாக வினாக்கள் கேட்கப்படாது. ஆனால், இந்த ஆண்டு அந்த பகுதியில் இருந்துதான் 3, 5 மதிப்பெண் வினாக்கள் வந்திருந்தன.
இதனால் முழு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை உயராது’’என்றனர். அதேபோல், கணக்குப் பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் சற்று எளிதாக இருந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் பொதுத்தேர்வு முடிந்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். சில பள்ளிகளில் பிரிவு உபச்சார விழாக்களும் நடத்தப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 19 முதல் 30-ம் தேதி நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருத்துதல் பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியிடப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 28) தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு நேரங்களில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதோடு, அதற்கு உடந்தையாக இருக்கும் பள்ளி நிர்வாகத்தின் மையத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
No comments:
Post a Comment