Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 17, 2025

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் எப்போது? - டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தகவல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குருப்-1 மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர். எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.

2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது. அதில் குருப்-1 தேர்வு, குருப்-4 தேர்வு, குருப் 2 மற்றும் 2 ஏ தேர்வு உள்பட மொத்தம் 7 போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி குருப்-1 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1-ம் தேதியும், அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்கக்கூடிய ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 25-ம் தேதியும் வெளியிடப்பட வேண்டும். வழக்கமாக வருடாந்திர தேர்வு அட்டவணையில் வெளியிடப்படும்போதே காலியிடங்களின் எண்ணிக்கையும் தோராயமாக தெரிவிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதுபோன்று காலியிடங்களின் விவரம் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது :

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, அனைத்து தேர்வுகளும் குறிப்பிட்ட தேதியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். அந்த வகையில், குருப்-1 தேர்வு மற்றும் குருப்-4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் ஏப்ரல் மாதம் திட்டமிட்டபடி வெளியிடப்படும். அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்களின் விவரம் மார்ச் இறுதியில் எங்களுக்கு கிடைக்கும். தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும்போது காலிப்பணியிடங்களின் முழுவிவரமும் அதில் குறிப்பிடப்படும்.

தேர்வு எழுதுவோரின் வசதிக்காக விடைத்தாள் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு முதல் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படும். எனவே, விடைத்தாள் பக்கத்தை தேர்வர்கள் எந்தவிதமான சந்தேகமோ, குழப்பமோ இல்லாமல் மிக எளிதாக பூர்த்தி செய்ய முடியும். தேர்வர்கள் எளிதாக விடையளிக்கும் வகையில் விடைத்தாள் நடைமுறை அமைந்திருக்கும். தேர்வு முடிவுகளை விரைவாகவும் அதேநேரத்தில் சிறு தவறுகூட இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் டிஎன்பிஎஸ்சி உறுதியாக இருக்கிறது.

உதவி சுற்றுலா அலுவலர், உதவி பொறியாளர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுக்கான (நேர்காணல் இல்லாதது) மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆன்லைன் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதி பெற்றவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அதற்கான பட்டியல் வெளியிடப்படும். அதேபோல், குருப்-1-சி தேர்வின் கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி பதவிக்கான முதல்நிலைத்தேர்வு முடிவை உயர்நீதிமன்ற வழக்கு காரணமாக வெளியிட முடியவில்லை. தேர்வு முடிவை வெளியிட சட்ட ரீதியிலான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top