Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 1 வகுப்புக்கான தமிழ் பாடத் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று (மார்ச் 5) தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் சுமார் 8.1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். பள்ளி மாணவர்களில் 11,070 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
இதற்கிடையே, பிளஸ் 1 தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, “பிளஸ் 1 வினாத்தாள் சற்று எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் 4 வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. எனினும், மற்ற பகுதிகளில் ஏற்கெனவே கேட்கப்பட்ட வினாக்களும், புத்தகத்தில் உள்ள நேரடி வினாக்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் கடந்தாண்டைவிட இந்த ஆண்டு தமிழில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்” என்று தெரிவித்தனர்.
இதையடுத்து பிளஸ் 1 ஆங்கிலப் பாடத் தேர்வு மார்ச் 10-ல் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 27-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 19-ல் வெளியிடப்பட உள்ளது. இதேபோல், பிளஸ் 2 வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்தேர்வு நாளை (மார்ச் 6) நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் 8.21 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment