Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்த ஆண்டு பிறந்து 2 மாதங்களை கடந்தும் இதுவரை வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாததால் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பிஎட். பட்டதாரிகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், வட்டார கல்வி அதிகாரிகள் (பிஇஓ) அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு சட்டக்கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வாயிலாக தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலும், டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வையும் டிஆர்பி-தான் நடத்துகிறது.
ஓராண்டில் என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அடங்கிய வருடாந்திர தேர்வு அட்டவணையை டிஆர்பி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் கடந்த ஆண்டு டிசம்பர் அல்லது இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், 2025-ம் ஆண்டு பிறந்து 2 மாதங்கள் ஆகியும் இன்னும் வெளியிடாமல் டிஆர்பி காலம்தாழ்த்தி வருகிறது. இதனால், அரசு பள்ளி ஆசிரியர் தேர்வுகள் மற்றும் டெட் தேர்வுக்கு தீவிரமாக படித்துக்கொண்டிருக்கும் ஆசிரியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் மற்றும் பிஎட் முடித்த பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி 2025-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே வெளியிட்டுவிட்டது. ஆனால், டிஆர்பி இன்னும் வெளியிடவில்லை. 2025 பிறந்து மார்ச் மாதம் வரவுள்ள நிலையில் வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் தவிக்கிறோம்.
இதுகுறித்து டிஆர்பி ஹெல்ப்லைன எண்ணில் தொடர்புகொண்டு கேட்டால், ‘விரைவில் வெளியாகும் இணையதளத்தை பாருங்கள்' என்று சொன்ன பதிலையே சொல்கிறார்கள். டெட் தேர்வு கடந்த 2023-ம்ஆண்டு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தவில்லை. இதனால் டெட் தேர்வை எதிர்பார்த்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் தேர்வு அட்டவணையை வெளியிடாமல் டிஆர்பி காலதாமதம் செய்கிறது. இவ்வாறு அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
கடந்த 2024-ம் ஆண்டு டிஆர்பி வெளியிட்ட தேர்வு அட்டவணையில் டெட், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு ஆகிய 3 தேர்வுகளுக்கான அறிவிப்புகள்கூட இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment