Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 27, 2025

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது: தமிழகம் முழுவதும் 9.13 லட்சம் பேர் எழுதுகின்றனர்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன்பின் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் (மார்ச் 27) நிறைவு பெறுகிறது. இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 பேர் எழுதுகின்றனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87,148 மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272சிறை கைதிகளும் அடங்குவர்.

பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 48,426 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,858 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுமார் 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகளை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உட்பட மின்சாதனம் கொண்டுவர தடை உள்ளது. ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும்அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

பொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வது, தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து விடைத்தாள் திருத்துதல் பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும்.

இதுதவிர பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இவற்றை 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக்கல்வித் துறையின் 14417 உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Post Comments

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News

Back To Top