Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆண்டு இறுதித்தேர்வின்போது வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தால் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள் உட்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்கக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 8 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற 2-ம் பருவத் தேர்வின்போது சில மாவட்டங்களில் வினாத்தாள்கள் தேர்வு நடைபெறுவதற்கு முன்பாகவே விடைக் குறிப்புகளுடன் சமூக ஊடகங்களில் ஆசிரியர்களின் வழியாக பொது வெளியில் பரவியது கண்டறியப்பட்டு அவர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆண்டு இறுதி தேர்வுகளின் போது தேர்வுக்குரிய வினாத்தாள்களை எமிஸ் தளத்தில் பதிவிறக்கம் செய்து பிரதிகள் எடுக்கும்போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பாக வெளியாகாதபடி முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
அதேநேரம் வரும் காலங்களில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தால் வெளியிடப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்கள் அந்த ஒன்றியத்தின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே தேர்வுப் பணிகளில் சுணக்கம் இன்றி கவனமாக செயல்பட வேண்டும். மேலும், ஆண்டு இறுதித் தேர்வை எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காதவாறு முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment