Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: 'அரசுப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை தானாக பரிசோதனை செய்து கற்றலை மேம்படுத்துவதற்காக வானவில் மன்றம்-நடமாடும் அறிவியல் ஆய்வகம் திட்டம் 2022-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து வகுப்பறைக் கற்பித்தலில் புதுமையாக செயல்பட வேண்டியதை உணர்ந்து படைப்பாற்றலுடன் செயல்பட்டு வரும் அறிவியல், கணித ஆசிரியர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.
இந்த மாநாடு பள்ளிகளில் அறிவியல், கணித வகுப்பறைகளில் நடைபெறும் புதிய கற்பித்தல் முறைகளை பயன்பாட்டு நோக்கில் ஆய்வு செய்து தொகுப்பு கட்டுரைகளை பகிரும் மேடையாக இருக்கும். அதன்படி மாநிலம் முழுவதும் 643 ஆசிரியர்கள் வரை தங்கள் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகளை மண்டல வாரியாக சமர்ப்பிக்கும் வகையில் மேற்கு, தெற்கு, மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மார்ச் 15-ம் தேதி மாநாடுகள் நடத்தப்படவுள்ளன.
அதன்படி மேற்கு மண்டல மாநாடு நாமக்கல் மாவட்டத்திலும், தெற்கு மண்டல மாநாடு மதுரையிலும், மத்திய மண்டல மாநாடு புதுக்கோட்டையிலும், வடக்கு மண்டல மாநாடு வேலூரிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மாநாட்டில் பங்கேற்கவுள்ள ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்படும் 5 நிமிடங்களில் ஆய்வறிக்கை குறித்து விளக்கிப் பேச வேண்டும். ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் சிறப்பிடம் பெற்ற 10 கட்டுரைகள் தேர்வாகும்.
மாநில அளவில் சிறப்பிடம் பெறும் 40 கட்டுரைகள், சிறப்புக் குழந்தைகளுக்கான ஆய்வறிக்கைகள் 5 என மொத்தம் 45 ஆய்வறிக்கைகளை சமர்ப்பிக்கும் நிகழ்வு சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறும். எனவே, உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு சிறப்பாக நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.' இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment