Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் செப்டிக் டேங்கில் விழுந்து எல்கேஜி பயின்ற சிறுமி உயிரிழந்தார். இந்நிலையில், இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கக் கோரி பாஜக வழக்கறிஞர் ஏ. மோகன்தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது விக்கிரவாண்டி பள்ளி விவகாரம் தொடர்பான வழக்கில் புலன் விசாரணை முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக பலியான சிறுமியின் தந்தை சிபிசிஐடி விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், மனுதாரர் இந்த கோரிக்கை தொடர்பாக கடந்த ஜன.6-ம் தேதி அரசுக்கு மனு அளித்துவிட்டு, அரசுக்கு போதிய அவகாசம் அளிக்காமல் உடனடியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதன் மூலம் பொதுநல வழக்கு தாக்கல் செய்யும் நடைமுறையை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும், குற்றச்சாட்டுகள் பொத்தாம் பொதுவாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், ‘செப்டிக் டேங்கில் சிறுமி விழுந்து இறந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் எப்படி குறைகூற முடியும்?’ எனக் கேள்வி எழுப்பினர்.
அதையடுத்து இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றுக்கொண்டாலும், அரசுக்கு அளித்துள்ள கோரிக்கை மனு மீது ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment