Join THAMIZHKADAL WhatsApp Groups

வரும் கல்வி ஆண்டில் (2025-26) தேர்வில் முக்கிய சீர்திருத்தங்களை சிபிஎஸ்இ அறிமுகம் செய்கிறது.
இதன்படி 12-ம் வகுப்பு அக்கவுன்டன்சி மாணவர்கள் பேசிக் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது.
இந்த முடிவுக்கு சிபிஎஸ்இ-யின் 140-வது ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஎஸ்இ வட்டாரங்கள் கூறுகையில், “12-ம் வகுப்பு அக்கவுன்டன்சி மாணவர்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் மற்றும் சதவீத கணக்கீடு மட்டுமே கொண்ட பேசிக் கால்குலேட்டர் அனுமதிக்கப்படும். இது தொடர்பான வழிகாட்டு விதிகளை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும். சர்வதேச மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு இணங்கவும் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தன.
டிஜிட்டல் மதிப்பீடு: மற்றொரு முக்கிய சீர்திருத்தமாக, விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யும் வகையில் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் (ஓஎஸ்எம்) முறையை அறிமுகப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
தொடக்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதன்படி விடைத்தாள்கள் மதிப்பீட்டுக்காக ஸ்கேன் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். இது விரைவான மற்றும் திறமையான மதிப்பீட்டு நடைமுறையை உறுதிப்படுத்தும்.
இந்த டிஜிட்டல் மதிப்பீட்டு முறையை 2024-25 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அறிவியல், கணிதம் பாடங்களுக்கான துணைத் தேர்வுகள் மற்றும் மறு மதிப்பீட்டுக்கு சிபிஎஸ்இ அறிமுகப்படுத்த உள்ளது.
தங்கள் மதிப்பெண்களில் அதிருப்தி அடையும் மாணவர்களுக்கான புதிய மறு மதிப்பீட்டு நடைமுறையால் வெளிப்படைத்தன்மை மேம்படும். மேலும் நியாயமான மதிப்பீட்டு முறையை உறுதி செய்யும்.
திறன் அடிப்படையிலான (தொழில்) பாடங்களில் பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறையில் மாற்றம் செய்யவும் சிபிஎஸ்சி-யின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பாடங்களில் மதிப்பீடு செய்வதற்கு தொழிற்கல்வி மற்றும் தொழில் துறையில் நிபுணத்துவம் பெற்ற சுதந்திரமான வெளி அமைப்புடன் வாரியம் இணைந்து செயல்படும்.
No comments:
Post a Comment