Join THAMIZHKADAL WhatsApp Groups
வயிற்றுப் போக்கு
வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் வெந்நீரில் உப்புப் போட்டுக் குடித்தால், மாதுளம் பழத்தின் தோலை அரைத்துத் தண்ணீரில் ஊற்றிக் கசாயம் செய்து குடித்தால், தேயிலை நீரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடித்தால் வயிற்றுப் போக்கு உடனே நின்றுவிடும்.
கபம்
மிதமிஞ்சிய சளியாலும் சளி கெட்டிப் படுவதாலும் ஏற்படும் நோய் இதுவாகும். இது கோழை கட்டுதல் என்றும் கூறப்படும். வெள்ளைப் பூண்டை அரைத்து ஒரு துணியில் கட்டி அதனை விளக்கில் காட்டிச் சுடவைத்து அத்துணியைப் பிழிந்து இஞ்சிச் சாற்றோடு கலந்து குடித்தால் கபம் நீங்கும். மேலும் வெள்ளைப் பூண்டைச் சுட்டு அல்லது வேகவைத்துக் கடைந்து தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை குடித்தாலும் குப்பைமேனிக் கீரையை அரைத்துச் சாறு குடித்து வந்தாலும் இந்நோய் குணமாகிவிடும்.
இருமல்
சுக்கு, உப்பு இரண்டையும் அரைத்துத் தொண்டையில் பூசினாலோ, பனைக் கற்கண்டோடு மிளகு சேர்த்து உண்டாலோ இருமல் நின்றுவிடும்.
வாதநோய்
பெருங்காயம், கடுகு, நல்ல மிளகு, வசம்பு, கருஞ்சீரகம், வெள்ளைப் பூண்டு இவற்றைச் சேர்த்து அரைத்துக் காய்ச்சிக் குடித்து வந்தால் வாத நோய்கள் தீரும்.
மூல நோய்
மூல நோய் உள்ளவர்கள் தேங்காய் நாரின் சாறெடுத்துக் குழந்தைகளின் சிறுநீரில் சேர்த்து, மூலத்தில் தேய்த்தால் குணமாகும். பசும் பாலை, ஆடு அல்லது மாட்டுக் கொழுப்பில் குழைத்து மூலத்தில் தடவிவந்தாலும் மூல நோய் குணமாகும்.
கால் வீக்கம்
கால் வீக்கம் இருந்தால், நல்லெண்ணெய், சாம்பிராணி, எலுமிச்சம் பழச்சாறு இவற்றைச்சேர்த்துச் சூடாக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கால் வீக்கம் குறையும். பச்சரிசி மாவை வேக வைத்து வீக்கத்தில் கட்டினாலும் வீக்கம் குறைந்துவிடும்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை நோய்க்கு இன்றுவரை நாட்டுப்புற மருத்துவமே சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள் கீழாநெல்லி (வேர் தவிர்த்து) இலையை அரைத்துப் பசும்பாலுடன் சேர்த்துத் தொடர்ந்து மூன்று வேளை (வாரம் ஒருமுறை) குடித்து வந்தால் மஞ்சள் காமாலை பூரண குணமாகும்.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் உள்ளவர்கள் ஆமணக்கு வேரை நீரில் போட்டுக் காய்ச்சிக் கசாயம் செய்து கசாயத்துடன் பசும்பாலும் சர்க்கரையும் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர மலச்சிக்கல் தீரும். கொன்றை இலை, கொன்றை இலைக் கொழுந்து இவைகளை நீர்வீட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தாலும் மலச்சிக்கல் தீரும்.
இளநரை
இளைஞர்களை மனம் நோகச் செய்வது இளநரையாகும். உடலில் பித்தம் அதிகமாவதால் இளநரை ஏற்படுகிறது. இதற்கு நெல்லிச் சாறு, செஞ்சந்தனம். மகிழம்பூ ஆகியவற்றைச் சேர்த்துத் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து காய்ச்சித் தலையில் தேய்த்துவந்தால் பித்தம் தணியும். இளநரையும் நீங்கும். கண்ணிற்கும் குளிர்ச்சி உண்டாகும்.
தாய்ப்பால் குறைவு
பிள்ளை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரக்கக் காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டினாலோ அல்லது வெள்ளரி விதையை அரைத்து மார்பில் பூசினாலோ அல்லது ஆலம் விழுது. ஆலம் விதைகளை அரைத்துப் பசும்பாலில் கலந்து காய்ச்சிக் குடித்தாலோ நன்கு பால் சுரக்கும்.
3.2.3 வலிகளும் நாட்டுப்புற மருத்துவமும்
மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு வகையான உடல் வலிகளுக்கு நாட்டுப்புற மருத்துவத்தில் எளிய வழிகளும் மருத்துவ முறைகளும் வழக்கத்தில் உள்ளன.
தலைவலி
தலையும் நோவும் தனக்கு வந்தால் தெரியும் என்பது பழமொழி. தலைவலி சிலருக்குத் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு எப்பொழுதாவது வரும். இத்தலைவலியைப் போக்க, செஞ்சந்தனக் கட்டையை உரைத்து நெற்றியில் பூசுவர். கரிசலாங் கண்ணிக் கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணெய்யில் சேர்த்து மூக்கிலிடுவர். மேலும் கடுமையான இருமலும் தலைவலியும் சளியும் இருந்தால் காட்டுப் பகுதியில் மண்டிக் கிடக்கும் நொச்சி இலைகளைப் பறித்து வந்து மண்சட்டியில் போட்டு நீர் விட்டுக் கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் நீராவியை மூக்கு வழியாக உள்ளே இழுத்து ஆவி பிடிக்கும் முறையைப் பின்பற்றுவர். தலைவலிக்கு இதுபோன்ற எளிய மருத்துவ முறைகளை மேற்கொண்டு நலம் பெறலாம்.
காது வலி
ஐம்புலன்களில் காது மிக முக்கியமான உறுப்பாகும். காதில் ஏற்படும் வலியினைப் போக்கத் தேங்காய் எண்ணெயில் மிளகு, வெள்ளைப் பூண்டு போட்டுக் காய்ச்சி இளஞ்சூடாகக் காதில் ஊற்றினாலோ அல்லது உள்ளியைப் (வெங்காயம்) பிழிந்து காதில் விட்டாலோ காது வலி உடனடியாகக் குணமாகும்.
பல் வலி
பற்களில் ஏற்படும் வலியினைப் போக்க வேப்பிலைக் கொழுந்து, மஞ்சள், திருநீறு இவற்றைச் சேர்த்து அரைத்துக் கன்னத்தில் பூசினால் பல் வலி மற்றும் வீக்கம் குறையும். புழு விழுந்த பல்லில் சூடம் அல்லது கிராம்பு வைத்தால் குணமாகும். மிளகு, உப்பு ஆகியவற்றை அரைத்துப் பல்லில் தேய்த்தாலும் வலி நீங்கும்.
No comments:
Post a Comment