Join THAMIZHKADAL WhatsApp Groups

மத்திய அரசும் தமிழக அரசும் ஆளுக்கொரு பக்கம் மொழிப்போரை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழகத்தில் வேர்விட்டு வளர்ந்த தாய்த்தமிழ் பள்ளிகள் நிதிச் சுமையால் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றன.
1993-ம் ஆண்டு வாக்கில், தமிழ்த்தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகுவின் முன்னெடுப்பால் தமிழகமெங்கும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உருவாகின. அப்படி உருவாகி நூற்றுக்கும் மேலாக பெருகிய அந்தப் பள்ளிகளில் இப்போது 17 பள்ளிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள் எல்லாம் பல்வேறு காரணங்களால் இழுத்து மூடப்பட்டுவிட்டன
இதுகுறித்து நம்மிடம் பேசிய தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை பள்ளிகளின் கூட்டமைப்பு தலைவர் சிவ. காளிதாசன், “1993-ம் ஆண்டு சென்னை அம்பத்தூர் மேனாம்பேட்டில் ரூ. 1 மட்டும் நன்கொடை பெற்றுக்கொண்டு, தாய் குழந்தைக்கு பால் புகட்டுவது போன்ற படத்தை பெற்றோரிடம் தந்து, குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தர துவங்கினோம்.
பின்பு அதை தாய்த்தமிழ் கல்விப்பணி அறக்கட்டளையாக மாற்றி, அதே பகுதியில் 10 சென்ட் நிலம் வாங்கி கூரை கட்டிடத்தில் தாய்த்தமிழ் பள்ளியை தொடங்கினோம். இதையடுத்து தமிழகம் முழுவதும் தாய்த்தமிழ் பள்ளிகள் தன்னெழுச்சியாக பூத்தன. பிள்ளையார் சுழிபோட்ட அம்பத்தூர் பள்ளியானது இப்போது 5-ம் வகுப்பு வரை செயல்படுகிறது.
திண்டிவனம் ரோசனையில் பேராசிரியர் கல்விமணி, நடுநிலைப் பள்ளியை இன்றைக்கும் சிறப்பாக நடத்தி வருகிறார். திருப்பூர் வள்ளலார் நகர், பாண்டியன் நகர், பல்லடம் ஆகிய இடங்களில் துவக்கப்பள்ளிகள், பல்லடம் சிங்கனூரில் உயர்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி கள்ளிப்பாளையத்தில் தாய்த்தமிழ்ப்பள்ளி என தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் உருவாகின.
அரசுப் பள்ளிகளிலேயே இன்றைக்கு ஆங்கிவழிக் கல்வி வந்துவிட்டதால், தாய்த்தமிழ்ப் பள்ளிகளை நடத்துவது பெரும்பாடாக இருக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 43 லட்சம் குழந்தைகளும், சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகளில் 65 லட்சம் குழந்தைகளும் படிக்கின்றனர்.
ஆனால், தாய்த்தமிழ் பள்ளியில் ஆயிரக் கணக்கில் மட்டுமே குழந்தைகள் படிக்கின்றனர். 2006 திமுக ஆட்சியின் போது சென்னை மேயராக இருந்த மா.சுப்பிரமணியன், சென்னையில் 25 மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழியை கொண்டுவந்தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா தனது ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதாகக் கூறி ஆங்கில வழிக் கல்வியை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தினார்.
தாய்த்தமிழ்ப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் கட்டாயம் இருப்பார். ப்ரிகேஜியை அரும்புகள் என்றும், எல்கேஜியை பூக்கள், என்றும் யூகேஜியை பிஞ்சுகள் என்றும் பிரித்து சொல்லித் தருகிறோம். ஆசிரியர்களை அத்தை, அக்கா, அம்மா, அண்ணா என்று அழைக்க வைக்கிறோம். குழந்தைகளுக்கு பயம் இல்லாத சூழலில் அனைத்தையும் தமிழ்வழியில் சொல்லித்தருகிறோம். ஆங்கிலம் ஒரு பாடம் மட்டுமே. மற்றவை அனைத்தும் தமிழில் தான். அரும்புகள் துவங்கி 10-ம் வகுப்பு வரை அது தான் நடைமுறை.
குழந்தைகள் வீட்டில் இருந்து படிப்பது போன்ற சூழ்நிலையைத்தான் தாய்த்தமிழ் பள்ளிகளில் உருவாக்கி உள்ளோம். தாய்மொழி துவக்கக் கல்வியே பலரையும் மகத்தானவர்களாக உருவாக்கியிருப்பதால், தொடர்ந்து தாய்மொழி பள்ளிகளின் தேவைகளை அரசும் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பள்ளிகளில் படித்த பலரும் நகராட்சி ஆணையர்களாகவும் தலைமைச் செயலகத்தில் பல்வேறு உயர் பதவிகளிலும் உள்ளனர்.
இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் தாய்த்தமிழ் பள்ளிகளை நடத்துவது பெரும் சவாலாக உள்ளது. ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க வேண்டும், இந்தப் பள்ளிகளை அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைத்திருக்கிறோம். அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை செலவு செய்கிறது அரசு. ஆனால், எங்களுக்கு புத்தகப்பை, காலணிகள், புத்தகங்கள், குறிப்பேடு ஆகியவற்றை மட்டுமே அரசு வழங்குகிறது.
இந்த நிலை மாற வேண்டும். உயர் கல்வி தொடங்கி மத்திய - மாநில அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். தாய்மொழிக்கென்று நடத்தும் இந்தப் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில், காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்களை இந்தப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்” என்றார்.கல்விக்காக ஆண்டுக்கு சுமார் 49 ஆயிரம் கோடியை ஒதுக்கும் தமிழக அரசு, தாய்த்தமிழ்ப் பள்ளிகளை பாதுகாத்துப் போற்றி ஊக்குவிக்கவும் உரிய முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய நேரமிது!
No comments:
Post a Comment