Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில், ஆறு முதன்மை கல்வி அதிகாரிகள், 20 மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் 2,000க்கும் அதிகமான அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீதிமன்ற வழக்குகளால், இப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால், கல்விப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
திருவாரூர், மயிலாடுதுறை, நீலகிரி, வேலுார், கிருஷ்ணகிரி, கரூர் மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இம்மாவட்டங்களில், தொடக்க கல்வி துறையில் பணியாற்றும், மாவட்ட கல்வி அலுவலர்களிடம், முதன்மை கல்வி அதிகாரிகள் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அவர்கள் ஏற்கனவே வகித்து வரும், தொடக்க கல்வித் துறையை கவனிக்க முடியாததுடன், முதன்மை கல்வி அதிகாரிக்கான பணியையும் செய்ய முடியாமல் திணறுகின்றனர். ஏனெனில், பொறுப்பு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, மற்ற அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அதேநேரத்தில் அவர்கள், முதன்மை கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு பெற வேண்டி உள்ளதால், அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அது புகாராகி, பதவி உயர்வு பாதிக்கப்படுமோ என்ற அச்சத்திலும் முடிவெடுக்க தயங்குகின்றனர்.
இதுபோல, மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. நீதிமன்ற வழக்குகளால் இப்பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை உள்ளது. இதனால், கல்விப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரியாக பதவி உயர்வு வழங்க முடியாத நிலை உள்ளது. பள்ளிக்கல்வி துறையில், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக, பல தனி நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவற்றில் சில வழக்குகளில் தீர்ப்பு வந்த பிறகும், அவற்றை அரசு நிறைவேற்றவில்லை. இதனால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் அதிகரித்துள்ளன.
உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனக்கோரிய வழக்கு, 2023ல் முடித்து வைக்கப்பட்டது. அப்போது, 1,120 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
No comments:
Post a Comment